''டெல்லியில் இந்தியாவுக்கு எதிராக நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் நாங்கள் தோல்வி அடைந்தாலும், அடுத்து நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு பாகிஸ்தான் அணி பதிலடி கொடுக்க முயற்சிக்கும்'' என்று அந்த அணியின் மூத்த வீரர் முகமது யூசுப் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கட்டுரையில், முதல் டெஸ்ட்டில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும், உண்மையில் இந்திய அணியினர் ஒவ்வொரு ரன்னுக்கும் போராட வேண்டி இருந்தது. 203 ரன்களை தற்காத்துக் கொள்ள வேண்டிய நிலையில் சோயிப் அக்தர் பந்து வீசிய விதம் அற்புதமாக இருந்தது. அதிலும் குறிப்பாக ராகுல் திராவிட்டை அவுட்டாக்க அவர் வீசிய பந்து மிகவும் சிறப்பானது. கொல்கத்தா, பெங்களூர் டெஸ்ட் போட்டிகளில் அக்தர் மேலும் பிரகாசிப்பார் என்று எதிர்பார்க்கிறேன்.
2-வது இன்னிங்சில 280 ரன்கள் முன்னிலை பெற வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் அந்த எண்ணம் நிறைவேறவில்லை. அவ்வாறு 280 ரன் முன்னிலை பெற்றிருந்தால் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் இந்தியா மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும்.
ராகுல் திராவிட் ஆட்டம் இழந்தபோது மேலும் ஒரு விக்கெட் விழுந்திருந்தால் இந்தியா திணறி இருக்கும். ஆனால் கங்கூலி அந்த நேரத்தில் அற்புதமாக ஆடி இந்தியாவை மீட்டு விட்டார். டெண்டுல்கரும் சிறப்பாக ஆடினார். முதல் இன்னிங்சில் லஷ்மண் அபாரமாக ஆடினார்.
எப்படி பார்த்தாலும் முதல் டெஸ்ட் போட்டியில் தோற்றபிறகு மீண்டு வருவது கடினமானது. ஆனால் பாகிஸ்தான் அணி தீவிரமாக முயற்சி செய்து அடுத்த இரண்டு போட்டிகளில் இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க முயலும் என்று முகமது யூசுப் கூறியுள்ளார்.