இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரர் வீரர் கேரி கிறிஸ்டன் நியமிக்கப்படுவார் என்று கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உலககோப்பை போட்டிக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து கிரேக் சேப்பல் விலகினார். அதன் பிறகு இந்திய அணிக்கு பயிற்சியாளர் எவரும் நியமிக்கப்படவில்லை. இந்தநிலையில் ஆஸ்ட்ரேலிய சுற்றுப் பயணத்திற்கு முன்பு இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படுவார் என்று கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது. பயிற்சியாளர் பதவிக்கு 22 பேர் விண்ணப்பித்து உள்ளதாக கூறப்பட்டது.
புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யும் குழுவில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு பேரவையின் தலைவர் சரத்பவார், செயலர் நிரஞ்சன் ஷா, முன்னாள் வீரர் வெங்கட்ராகவன், இந்திய டெஸ்ட் அணித் தலைவர் அனில் கும்ப்ளே ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். அவர்களுடன் நேற்று கேரி கிறிஸ்டன் சந்தித்துப் பேசினார்.
இதை தொடர்ந்து கிறிஸ்டின் இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்பது உறுதியாகி இருக்கிறது. அவர்தான் பயிற்சியாளர் பதவிக்கான வாய்ப்பில் முதல் இடத்தில் உள்ளதாக கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தவாரம் அவர் பயிற்சியாளராக அறிவிக்கப்படுகிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி ஆகியோர் அடங்கிய குழு கிறிஸ்டனுடன் நேர்காணல் நடத்தியுள்ளனர்.
கடந்த 2004 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கேரி கிறிஸ்டன் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.