ஊக்கமருந்து பயன்படுத்தியதாக ஒப்புக் கொண்ட அமெரிக்க தடகள வீராங்கனை மரியோன் ஜோன்சின் ஒலிம்பிக் பதக்கங்கள் பறிக்கப்படுவதாக சர்வதேச தடகள சங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
2000வது ஆண்டு சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்க தடகள வீராங்கனை மரியோன் ஜோன்ஸ், 3 தங்கப்பதக்கம் உள்ளிட்ட 5 பதக்கங்களை வென்றார். பின்னர் அவர் மீது ஊக்க மருந்து பயன்படுத்தியதாக பிரச்சனை எழுந்தது.
இது தொடர்பாக ஊக்க மருந்து விசாரணை ஆணையம் மரியோன் ஜோன்ஸ்சிடம் விசாரணை நடத்தியது. அப்போது, ஊக்க மருந்து பயன்படுத்தியதை அவர் ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரது பதக்கங்கள் பறிக்கப்படும் என சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், இந்த பதக்கங்களை பறிப்பதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை சர்வதேச தடகள சங்கம் பிறப்பித்துள்ளது. மேலும் 2000வது ஆண்டுக்கு பிறகு மரியோன் ஜோன்ஸ் பங்கேற்ற அனைத்து போட்டிகளின் முடிவுகளும் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.