''உலகின் தலை சிறந்த ஆட்டக்காரர் டெண்டுல்கர் விக்கெட்டை கைப்பற்றுவது எனது கனவாகும்'' என்று பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் டேமிஷ் கனேரியா கூறியுள்ளார்.
பாகிஸ்தான் அணி ஒரு நாள் தொடரை 2-3 கணக்கில் இழந்த நிலையில் அடுத்து இந்திய அணியுடன் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.
முதல் டெஸ்ட் வரும் 22ஆம் தேதி டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம் பெற்றுள்ள சுழற்பந்து வீரர் டேனிஷ் கனேரியா, முகமது சமி, பைசல் இக்பால் ஆகியோர் நேற்று விமானம் மூலம் டெல்லி வந்தனர்.
முன்னதாக கராச்சியில் செய்தியாளர்களிடம் கனேரியா கூறுகையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் கடும் சவால் நிறைந்ததாக இருக்கும். டெண்டுல்கர், திராவிட், கங்குலி ஆகியோர் உலகின் தலை சிறந்த ஆட்டக்காரர்கள்.
டெண்டுல்கரை வீழ்த்துவது தான் எங்களது முக்கிய குறிக்கோள். அவரது விக்கெட்டை கைப்பற்றுவது எனது கனவாகும். டெண்டுல்கரை நான் இதுவரை அவுட் செய்தது கிடையாது.
இந்திய ஆட்டக்காரர்கள் சுழற்பந்து வீச்சில் திறமையாக ஆடக்கூடியவர்கள். இருந்தாலும் நாங்கள் சிறப்பாக பந்து வீசுவோம். நான் அணியின் முதன்மை சுழற்பந்து வீச்சாளர். பாகிஸ்தான் தொடரை கைப்பற்ற உதவியாக இருப்பேன் என்று கனேரியா கூறினார்.