டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியஆஸ்ட்ரேலியா வீரர் வார்ன் சாதனையை 2வது டெஸ்ட்டில் முரளிதரன் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட் கைப்பற்றி ஆஸ்ட்ரேலியா அணி முன்னாள் வீரர் ஷேன் வார்ன் முதல் இடத்தில் உள்ளார். ஷேன் வார்ன் 145 டெஸ்டில் 708 விக்கெட்டுகள் கைப்பற்றி உள்ளார். அவருக்கு அடுத்தப் படியாக இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் 2-வது இடத்தில் உள்ளார்.
ஆஸ்ட்ரேலியா சுற்றுப்பயணத்திற்கு முன்பு அவர் 113 டெஸ்டில் 700 விக்கெட் கைப்பற்றி இருந்தார். ஆஸ்ட்ரேலிய பயணத்தில் அவர் வார்ன் சாதனையை முறியடிப்பார் என்று கருதப்பட்டது. ஆஸ்ட்ரேலிய மண்ணில் வார்ன் சாதனையை முரளிதரனை முறியடிக்க விடமாட்டோம் என்று பான்டிங் கூறினார்.
பிரிஸ்பேனில் ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக நடந்த முதல் டெஸ்டில் முரளிதரன் 2 விக்கெட்தான் கைப்பற்றினார். இந்த போட்டியில் இலங்கை இன்னிங்ஸ் தோல்வி அடைந்ததால் அவரால் ஒரு இன்னிங்சில் மட்டுமே பந்து வீச முடிந்தது.
தற்போது இன்னும் ஒரு டெஸ்ட் தான் ஆஸ்ட்ரேலியாவுடன் உள்ளது. 114 டெஸ்டில் 702 விக்கெட் எடுத்துள்ள முரளிதரன், வார்னே சாதனையை முறியடிக்க இன்னும் அவருக்கு 7 விக்கெட் தேவை. ஒரே டெஸ்டில் 7 விக்கெட்டையும் கைப்பற்ற அவருக்கு திறமை இருக்கிறது. ஆஸ்ட்ரேலியாவில் உள்ள ஹேபர்ட் மைதானத்தில் வரும் 16ஆம் தேதி 2வது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. அப்போது வார்ன் சாதனையை முரளிதரன் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.