இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவராக மூத்த வீரர் அனில் கும்ளே நியமிக்கப்பட்டுள்ளார் என்று கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.
இந்திய அணித் தலைவராக இருந்த ராகுல் திராவிட் திடீரென ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அணித் தலைவராக தோனி நியமிக்கப்பட்டார்.
ஆனால் டெஸ்ட் அணித் தலைவர் பதவி நியமிக்கப்படாமல் இருந்தது. டெண்டுல்கருக்கு கொடுக்க இந்திய கிரிக்கெட் பேரவை முடிவு செய்திருந்தது. டெஸ்ட் அணித் தலைவர் பதவியை ஏற்கத் தயார் என்று சச்சின் கூறினார். ஆனால் திடீரென அணித் தலைவர் பதவியை வகிக்க சச்சின் மறுத்து விட்டார்.
இதையடுத்து, தோனியை டெஸ்ட் அணித் தலைவராக்க கிரிக்கெட் பேரவை முடிவு செய்தது. இதற்கு இந்திய முன்னாள் அணித் தலைவர் ரவி சாஸ்திரி, கிரேக் சேப்பல் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்தநிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு மட்டும் அணித் தலைவர் தேர்வு மொகாலியில் நேற்று இரவு நடந்தது. ஒரு நாள் போட்டி, 20 ஓவர் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வரும் தோனியே டெஸ்ட் அணித் தலைவராக தேர்வு பெற அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் யாரும் எதிர் பார்க்காத சுழற்பந்து வீச்சாளர் கும்ளே பாகிஸ்தான் தொடருக்கான டெஸ்ட் அணித் தலைவாக தேர்வு பெற்றார். இதை இந்திய கிரிக்கெட் வாரிய இணை செயலாளர் பாண்டவ் தெரிவித்தார். தேர்வு குழு தலைவர் வெங்சர்க்கார் தலைமையில் நடந்த கூட்டத்திற்கு பிறகு அவர் இதை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தோனிக்கு கூடுதல் நெருக்கடி கொடுக்க விரும்பாததால் அவர் டெஸ்ட் போட்டிக்கு தலைவராக தேர்வு பெறவில்லை. கும்ளேயின் அனுபவத்தை வைத்து அவருக்கு டெஸ்ட் அணித் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக தேர்வு குழு வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்திய அணியின் புதிய டெஸ்ட் அணித் தலைவராக தேர்வு பெற்ற கும்ளே செய்தியாளர்களிடம் கூறுகையில், டெஸ்ட் அணித் தலைவர் பதவி வழங்கி என்னை கவுரவப்படுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் அணித் தலைவராவது கனவாகும். எனது கனவு பலித்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான தொடர் சவால் நிறைந்தது. சக வீரர்கள் முழு ஒத்துழைப்புடன் டெஸ்ட் தொடரை கைப்பற்றுவோம். தேர்வு குழுவினர் என் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
37 வயதாகும் கும்ப்ளே 1990ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டர் டெஸ்டில் அறிமுகம் ஆனார். 118 டெஸ்டில் விளையாடி 566 விக்கெட் கைப்பற்றியுள்ளார். இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 144 ரன் கொடுத்து 14 விக்கெட் கைப்பற்றியது. அவரது சிறந்த பந்து வீச்சு ஆகும். ஒரு இன்னிங்சில் 10 விக்கெட் கைப்பற்றிய உலக சாதனையாளராவார். பாகிஸ்தானுக்கு எதிராக டெல்லியில் நடந்த டெஸ்டில் 74 ரன் கொடுத்து 10 விக்கெட் சாய்த்தார்.
2007ஆம் ஆண்டு உலக கோப்பைக்கு பிறகு அவர் ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். டெஸ்டில் மட்டுமே ஆடி வருகிறார். இந்திய அணியின் 30-வது டெஸ்ட் அணித் தலைவர் கும்ளே. 1990ல் இருந்து விளையாடி வரும் கும்ளே 2002-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஒரே ஒரு நாள் போட்டிக்கு தலைவராக இருந்துள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான 3 டெஸ்ட் போட்டி தொடரில் முதல் டெஸ்ட் 22ஆம் தேதி டெல்லியில் தொடங்குகிறது.