மூத்த வீரர்களை தேர்வுக்குழுத் தலைவர் நடத்தும் விதம் பிடிக்காமலேயே சச்சின் தெண்டுல்கர் அணித் தலைவர் பதவியை மறுத்ததாக கூறப்படுகிறது.
இந்திய டெஸ்ட் அணித் தலைவராக சச்சின் டெண்டுல்கரை நியமிக்க தேர்வுக்குழுவினர் முடிவு செய்தனர். ஆனால் டெண்டுல்கர் அதனை ஏற்க மறுத்துவிட்டார். அவரது முடிவு பலருக்கு வியப்பை அளித்தது. டெண்டுல்கர் ஏன் அணித் தலைவர் பதவியை மறுத்தார் என்னும் கேள்விக்கு பலவிதமான பதில்கள் கூறப்படுகிறது.
மூத்த வீரர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கப்படவில்லை. அவர்கள் அவமரியாதை செய்யப்படுகிறார்கள். வீரர்கள் தேர்வு முறையும் சரியில்லை என்று சரத்பவாருக்கு எழுதியுள்ள கடிதத்தில் டெண்டுல்கர் குறிப்பிட்டுள்ளார்.
மூத்த வீரர்களுக்கு ஏற்பட்ட அவமரியாதை காரணமாகவே அவர் தனது முடிவை மாற்றிக் கொண்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆனால் டெண்டுல்கருக்கு நெருக்கமான வட்டாரங்கள் இதனை மறுக்கின்றன. ஏற்கனவே இரண்டு முறை அணித் தலைவர் பதவியை மறுத்துவிட்ட டெண்டுல்கர், இப்போதுஅந்த பொறுப்பை ஏற்க மனதளவில் தயார் இல்லை என்று கூறப்படுகிறது.
அதிரடி ஆட்டக்காரர் என்னும் நிலையிலிருந்து முதிர்ச்சியடைந்த ஆட்டக்காரராக மாறியிருக்கும் அவர், தனது ஆட்டம் தொடர்பாக விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார். இந்நிலையில் அணித் தலைவர் பதவி ஏற்பது ஏற்றதாக இருக்காது என்று அவர் கருதுவதாக கூறப்படுகிறது.
கிரிக்கெட் வாழ்க்கை தொடர்பான திட்டம் தெளிவாக இருப்பதால் அவர் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தற்போதைய நிலையிலேயே தொடர விரும்புவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.