''முதல் ஒரு நாள் போட்டி வெற்றி அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்ததாகும்'' என்று இந்திய அணித் தலைவர் தோனி கூறினார்.
குவஹாத்தியில் நடந்த முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் இந்திய அணி தலைவர் தோனி கூறுகையில், முதல் ஒரு நாள் போட்டி வெற்றி அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்ததாகும். எங்கள் பந்து வீச்சு, பேட்டிங் சிறப்பாக இருந்தது. அதேபோல் பீல்டிங்கும் நன்றாக இருந்தது. சுழற்பந்து வீச்சு எடுபட்டது.
யுவராஜ் சிங்குடன் இணைந்து பேட்டிங் செய்தது மகிழ்ச்சியாக இருந்தது. இருவரும் நன்றாக விளையாடினோம். இடது, வலது கை வீரர்கள் இணைந்து ஆட வேண்டும் என்று முடிவு செய்து நான் முன் வரிசையில் களம் இறங்கினேன். அதற்கு நல்ல பலனும் கிடைத்தது. இந்த வெற்றி அடுத்த 4 போட்டிக்கும் நல்லதொரு அடித்தளமாக அமையும் என்று தோனி கூறினார்.
தோல்வி குறித்து பாகிஸ்தான் அணி தலைவர் சோயிப் மாலிக் கூறுகையில், இரண்டு, மூன்று கேட்ச்களை நாங்கள் தவறவிட்டது தோல்விக்கு முக்கிய காரணமாகும். அந்த கேட்ச்களை நாங்கள் சரியாக செய்து இருந்தால் ஆட்டத்தின் முடிவு மாறி இருக்கும். பீல்டிங்கில் நாங்கள் நிறைய தவறுகள் செய்தோம். அது எங்களுக்கு பெரும் பாதிப்பை கொடுத்தது. அடுத்த ஆட்டத்தில் இந்த தவறை செய்யமாட்டோம் என்று நம்புகிறோம்.
239 ரன் வெற்றிக்கு போதுமான ஸ்கோர் தான். பீல்டிங்கில் செய்த தவறு அணி வீழ்ச்சிக்கு காரணமாகி விட்டது. அக்தர் எங்கள் அணியின் சொத்தாவார். அவர் முழு உடல் தகுதியுடன் உள்ளார். ஒவ்வொரு போட்டியும் புதிய போட்டியாகும். அடுத்த போட்டியில் புத்துணர்ச்சியுடன் பங்கேற்று வெற்றிக்கு முயற்சிப்போம். இந்தியாவில் விளையாடுவதை நான் விரும்புகிறேன். ஏனெனில் இங்கு ஆட்டத்தை ரசிக்க அதிக ரசிகர்கள் வருவார்கள். மைதானம் கடினமாக இருந்தது பிரச்சினையாக அமைந்தது என்று மாலிக் கூறினார்.