மேற்கு வங்க மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரிஸ்வானுர் கொலை வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்கூலியின் மூத்த சகோதரர் சிநேகசீஸ் கங்கூலியிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
ரிஸ்வானுர் ரஹ்மான் என்ற கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் ஆசிரியர் பிரபல தொழிலதிபர் அசோக் டோடியின் மகளை காதல் திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலையில் மேற்கு வங்க மாநில காவல்துறை அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் கிரிக்கெட் வீரர் கங்கூலியின் மூத்த சகோதரர் சிநேகசீஸ் கங்கூலியை அழைத்து விசாரணை நடத்தி உள்ளனர்.
மேலும் தொழிலதிபர் அசோக் டோடி, அவரது உறவினர் அனில் சரோகி ஆகியோரிடமும் விசாரணை நடைபெற்றது. இது தொடர்பாக முன்னாள் காவல்துறை ஆணையர் பிரசுன் முகர்ஜியிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.