இந்திய அணியில் மீண்டும் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சியை தருவதாகவும், எப்போதும் போலவே பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக ஆடுவேன் என்றும் வீரேந்திர ஷேவாக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் வீரேந்திர ஷேவாக் இடம் பெற்றுள்ளார். சேலஞ்சர் கோப்பை போட்டியில் அதிரடியாக ஆடி ரன் குவித்ததன் மூலம் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்திய அணியில் மீண்டும் இடம் பிடித்திருப்பது மகிழ்ச்சியை தருவதாக ஷேவாக் கூறியுள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிராக எப்போதுமே நான் சிறப்பாக ஆடி இருக்கிறேன். அதன் அடிப்படையில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் எனக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்த்தேன். அதன்படியே இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறேன் என்றார் ஷேவாக்.
பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக ஆடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. அந்த அணியில் அக்தர், உமர்குல் போன்ற சிறப்பான பந்துவீச்சாளர்கள் இருக்கின்றனர். இருந்தும் என்னால் பிரகாசிக்க முடியும் என்று நம்புகிறேன் என்று மேலும் அவர் கூறினார்.
ராகுல்திராவிட் அணியிலிருந்து நீக்கப்பட்டிருப்பது வருத்தம் தருவதாக ஷேவாக் தெரிவித்துள்ளார். திராவிட் மகத்தான ஆட்டக்காரர் என்றும் அவரைப் போன்றவருக்கு அணியில் இடம் இல்லை என்றால் அது வருத்தம் தரக்கூடிய விஷயம் என்று ஷேவாக் கூறினார்.