பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடருக்கான முதல் 2 ஆட்டங்களில் இருந்து ராகுல் திராவிட் நீக்கப்பட்டுள்ளார். இதற்கு இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் ராகுல் திராவிட் இடம்பெறவில்லை. வீரேந்திர சேவாக் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலர் நிரஞ்சன் ஷா நேற்று அறிவித்தார்.
தேர்வாளர்களின் இந்த முடிவு நியாயமற்றது என பல்வேறு முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது சரியான முடிவு இல்லை என்று முன்னாள் இந்திய அணியின் பயிற்சியாளர் மதன்லால் கூறியுள்ளார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிரிக்கெட் ஆடி வரும் அனுபவம் பெற்ற ஒருவரை எப்படி நீக்கலாம் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒரு சில போட்டிகளில் திராவிட் சரியாக விளையாடவில்லை என்பதற்காக அவர் நீக்கப்பட்டிருந்தால், இதே அணுகுமுறை டெண்டுல்கர், கங்குலி விஷயத்திலும் கடைபிடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று முன்னாள் விக்கெட் கீப்பர் சையத் கிர்மானி கூறியுள்ளார்.
திராவிட் நீக்கப்பட்டிருப்பது குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள பாகிஸ்தான் முன்னாள் அணித் தலைவர் இன்சமாம் உல் ஹக், இந்த முடிவு பாகிஸ்தான் அணிக்கு சாதகமாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.
திராவிட் போன்ற அனுபவம் மிக்க வீரர் அணியில் இருப்பது இளம் வீரர்கள் அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வசதியாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.