20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் சாக்லெட்டை போன்றது என்று முன்னாள் இந்திய வீரர் நவ்ஜோத்சிங் சித்து கூறியுள்ளார்.
50 ஓவர்கள் கொண்ட ஒரு நாள் போட்டியை விட 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பிரபலமடைந்து வருகிறது. இதன் தாக்கம் பற்றி தொடர்ந்து விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நவ்ஜோத் சிங் சித்து இது தொடர்பாக கூறுகையில், ஒருநாள் போட்டிகள் பிரபலமான போது அவை துரித உணவை போன்றது என்று கூறப்பட்டது.
பொதுவாக வீட்டு சாப்பாட்டையே சாப்பிடுவோம். எப்போதாவதுதான் வெளியே சென்று சாப்பிடுவோம். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான வித்தியாசம் அதுதான்.
ஆனால் தற்போது பரபரப்பாக பேசப்படும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சாக்லெட்டை போன்றது. அதனை குறைவாக சாப்பிட்டால் பிரச்சனை இல்லை. ஆனால் அதிகமாக சாப்பிட்டால் ஆபத்தாகிவிடும்.
மேலும் டெஸ்ட் போட்டி என்பது என்றும் கேட்கக் கூடிய சங்கீதத்தை போன்றது. 20 ஓவர் கிரிக்கெட் போட்டி என்பது டிஸ்கோ பாடல்களை போல கேட்டதும் மறந்து விடக்கூடியது என்று சித்து கூறியுள்ளார்.