ஊக்க மருந்து எடுத்துக் கொண்டது நிரூபணம் ஆனதால் 2 ஆண்டுகள் தடையை ஏற்றுக்கொண்ட அமெரிக்க தடகள வீராங்கனை மரியோன் ஜோன்ஸ் சிட்னி ஒலிம்பிக் போட்டிகளில் தான் வென்ற 5 பதக்கங்களையும் யு.எஸ். ஒலிம்பிக் கழகத்திடம் ஒப்படைத்தார்.
சிட்னி ஒலிம்பிக் போட்டிகளில் 100 மீ மற்றும் 200 மீ ஓட்டப்பந்தயங்களில் வென்ற 2 தங்கம், 1600மீ ரிலே ஓட்டத்தில் பெற்ற தங்கம், நீளம் தாண்டுதல் மற்றும் 400மீ ரிலே ஓட்டப்பந்தயத்தில் பெற்ற 2 வெண்கலம் ஆகிய 5 பதக்கங்களை யு.எஸ்.ஒலிம்பிக் கழகத்திடம் அவர் திருப்பி அளித்தார்.
இந்த பதக்கங்களை யு.எஸ்.ஒலிம்பிக் கழகம் சர்வதேச ஒலிம்பிக் கழகத்திடம் ஒப்படைத்த பிறகு, சர்வதேச ஒலிம்பிக் கழகம் தனது இறுதி முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஊக்க மருந்து எடுத்துக் கொண்ட குற்றச்சாட்டு தொடர்பாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில் அமெரிக்க அரசு தரப்பு விசாரணை அதிகாரிகளிடம் தான் உணமையை மறைத்ததை ஒப்புக் கொண்ட மரியோன் ஜோன்ஸ் 2000ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் ஜூலை 2001 வரை "தி கிளியர்" என்ற ஸ்டெராய்ட் மருந்தை எடுத்துக் கொண்டதாக ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து அவருக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டதோடு பதக்கங்களையும் பறிக்க உத்தரவிடப்பட்டது.