மும்பை, கொல்கத்தா, பெங்களூர் போன்ற நகர்ப் புறங்களிலிருந்து வரும் கிரிக்கெட் வீரர்களைக் காட்டிலும் சிறிய ஊர்களிலிருந்து வரும் கிரிக்கெட் வீரர்கள் உடல் மற்றும் மன அளவில் பலம் மிக்கவர்களாக உள்ளனர் என்று இருபதுக்கு 20 சாம்பியனான இந்திய அணியின் தலைவர் எம்.எஸ்.தோனி கூறியுள்ளார்.
நேற்று இருபதுக்கு 20 வெற்றி விழா மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. அதில் பேசிய தோனி இவ்வாறு கூறினார். பெரு நகரங்களில் வீரர்களுக்கு சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன. ஆனால் சிறிய ஊர்களில் விளையாட்டு வீரர்களுக்கு வசதிகள் குறைவாக இருப்பதால் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. இதனால் அவர்கள் உடல் மற்றும் மனதளவில் பலமாக உருவாகின்றனர் என்றார்.
ஆனால் எங்கிருந்து வந்தாலும் சர்வதேச அளவில் நன்றாக பரிணமிக்க வேண்டும் என்ற விழைவு ஒரு வீரரை வெற்றி வீரராக மாற்றுகிறது என்பதுதான் உண்மை என்றார்.
அவர் மேலும் கூறுகையில், உலகக் கோப்பையை வெல்வது என்பது என்ன என்பதையே இந்தியா வந்திறங்கிய போதுதான் உணர்ந்தேன் என்றார். ரசிகர்களின் இந்த ஏகோபித்த வரவேற்பு பலத்த உற்சாகத்தை ஏற்படுத்துகிறது என்றார்.
அடுத்ததாக இந்திய அணி, ஆஸ்ட்ரேலியாவை 7 ஒரு நாள் போட்டிகளைக் கொண்ட சர்வதேச கிரிக்கெட் தொடரில் சந்திக்கவுள்ளது.