நேற்று நடந்த 4வது போட்டியில் ஆஸ்ட்ரேலியா அணி ஜிம்பாப்வே அணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. மற்றொரு ஆட்டத்தில் ஸ்காட்லாந்தை பாகிஸ்தான் வீழ்த்தியது.
இருபதுக்கு 20 உலகப் கோப்பை கிரிட்கெட்டில் நேற்று நடந்த பி பிரிவு ஆட்டத்தில் ஆஸ்ட்ரேலியா-ஜிம்பாப்வே அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்ட்ரேலியா அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி அளித்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆடம் கில்கிறிஸ்ட் (4), மேத்திவ் ஹெய்டன் (4) ஆகியோர் சொற்ப ரன்களிலேயே ஆட்டம் இழந்தனர். இவர்களது விக்கெட்டை சிக்கும்புரா வீழ்த்தினார். மேலும் அதிர்ச்சியாக கேப்டன் ரிக்கி பாண்டிங் 8 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்.
அதிரடி ஆட்டக்காரர் சைமன்ஸ் அணியின் எண்ணிக்கை உயர்த்த காரணமாக இருந்தார். அவர் 40 பந்துகளில் 33 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். பின்னர் ஹக் அணியின் ரன்னை உயர்த்தினார். இவர் 36 பந்துகளில் 35 ரன் எடுத்தார். பின்னர் வந்த வீரர்கள் ஹூசேன் (15), ஹெட்டின் (6), பிரட்லி (12), ஜான்சன் (9), பிராகன் (4) ஆகியோர் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். முடிவில் 9 விக்கெட்டை இழந்து 138 எடுத்தது ஆஸ்ட்ரேலியா. ஜிம்பாப்வேயின் சிம்கும்பரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிரின்ட் 2 விக்கெட்டை கைப்பற்றினார். உத்சையா, மசகடா ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
139 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் டெய்லர்-சிபன்டா ஆகியோர் அதிரடியாக ஆடினர். ஆஸ்ட்ரேலியா பந்துகளை நாலாப்பக்கமும் சிதறி அடித்தனர். சிபன்டா 16 பந்தில் 23 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். டெய்லர் அதிரடியாக ஆடி 60 ரன் குவித்தார். இவருக்கு பக்கபலமாக மசகடா இருந்தார். இவர் 27 எடுத்து பிரட்லி பந்தில் ஆட்டம் இழந்தார். 19.5 ஓவரில் ஜிம்பாப்வே அணி 5 விக்கெட் மட்டும் இழந்து 139 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஆஸ்ட்ரேலியா அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
ஆட்டநாயகனாக டெய்லர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பாகிஸ்தான் வெற்றி
டி பிரிவில் பாகிஸ்தான்-ஸ்காட்லாந்து அணிகள் மோதியது. முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 171 ரன் எடுத்தது.
பின்னர் ஆடிய ஸ்காட்லாந்து 19.5 ஓவரில் 129 ரன்னுக்கு ஆல்அவுட்டானது. உமர் குல், அப்ரிடி ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தனர். ஆட்ட நாயகனாக அப்ரிடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.