ஐசிசி விருதுகளில் ஆஸ்ட்ரேலிய அணித் தலைவர் ரிக்கி பாண்டிங் இந்த ஆண்டின் சிறந்த வீரர் மற்றும் கேப்டன் விருதுகளை தட்டிச் சென்றுள்ளார்.
ஐசிசி நிபுணர்கள் குழு நேற்று டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் சிறந்து விளையாடிய வீரர்கள் மற்றும் அணிகளுக்கான விருது நேற்று அறிவித்தது.
இதில், சிறந்த அணித் தலைவர், சிறந்த வீரர் என்ற இரண்டு விருதையும் பாண்டிங் தட்டிச் சென்றுள்ளார். இதன் மூலம் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஐசிசி சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார் ரிக்கி பாண்டிங்.
ஆகஸ்ட் 9, 2006 முதல் ஆகஸ்ட் 8, 2007 ற்கு இடையே டெஸ்ட் போட்டிகளில் 576 ரன்களை 82.28 என்ற சராசரி வீதம் பெற்றுள்ள பாண்டிங் ஒரு நாள் போட்டிகளில் இதே காலக் கட்டத்தில் 51.52 என்ற சராசரி வீதத்தில் ரன்களை குவித்துள்ளார்.
மேலும் இந்த ஓராண்டில் ஆஷஸ் தொடர், ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் 2007 உலகக் கோப்பை ஆகியவற்றை ரிக்கி பாண்டிங் தலைமையில் ஆஸ்ட்ரேலியா வென்றது.
ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரராக பாகிஸ்தானின் மொகமத் யூசுப் தேர்வு செய்யப்பட்டார். ஒரு நாள் போட்டிகள் அணியிலிருந்து நீக்கப்பட்ட மேத்யூ ஹெய்டன் மீண்டும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடத் துவங்கி 25 போட்டிகளில் 1368 ரன்களைக் குவித்துள்ளார். இதனால் ஐசிசி சிறந்த ஒரு நாள் வீரர் விருது ஹெய்டனுக்கு சென்றது.
சிறந்த டெஸ்ட் வீரர் மற்றும் ஒரு நாள் வீரர் தேர்விலும் ரிக்கி பாண்டிங் கடும் போட்டியாக விளங்கினார். ஆனால் உலகக் கோப்பையில் ஹெய்டனின் சிறப்பான ஆட்டம் கைகொடுத்ததால் விருதை தட்டிச் சென்றார்.
ஐசிசி விருதுகளில் சிறந்த வளரும் வீரராக ஆஸ்ட்ரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஷான் டெய்ட் தேர்வு செய்யப்பட்டார்.
மகளிர் கிரிக்கெட்டில் ஆண்டின் சிறந்த வீராங்கனையாக இந்தியாவின் ஆல்ரவுண்டர் ஜுலன் கோஸ்வாமி தேர்வு செய்யப்பட்டார்.
சிறந்த நடுவராக ஆஸ்ட்ரேலியாவின் சைமன் டாஃபல் தேர்வு செய்யப்பட்டார்.
சிறந்த கிரிக்கெட் உணர்விற்கான விருது இலங்கை அணிக்கு கிடைத்துள்ளது.