தென் ஆப்பிரிக்க அணியின் ஆல் ரவுண்டர் ஆன்ட்ரூ ஹால் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
திடீரென ஓய்வு பெறுவதற்கான காரணங்களை அவர் வெளியிடவில்லை, ஆனால் 20க்கு இருபது உலகக் கோப்பை கிரிக்கெட் அணியில் அவர் தேர்வு செய்யப்படாதது ஒரு காரணமாக இருக்கலாம் என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆன்ட்ரூ ஹாலின் இந்த முடிவு அதிர்ச்சியளிக்கிறது என்றும், இந்திய கிரிக்கெட் லீகுடன் தொடர்பு கொண்டுள்ளாரா என்பது இன்னமும் உறுதியாக தெரியவில்லை என்றும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் சங்க தலைமை செயலதிகாரி டோனி ஐரிஷ் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் இத்தகவலை தன்னிடம் தெரிவித்தவுடன் தான் ஹாலை தொடர்பு கொண்டதாகவும், அதற்கு அவர் தன்னுடைய இந்த முடிவு விவாதங்களுக்கு அப்பாற்பட்டது என்று கூறியதாகவும் டோனி ஐரிஷ் மேலும் தெரிவிக்கையில் கூறியுள்ளார்.
ஆன்ட்ரூ ஹால் தற்போது இங்கிலாந்தில் கென்ட் அணிக்காக கவுண்டி கிரிக்கெட்டில் ஆடுகிறார், அந்த அணியின் பயிற்சியாளர் கிராகம் ஃபோர்ட் ஹாலின் இந்த முடிவு குறித்து கருத்து தெரிவிக்கையில் இருபதுக்கு இருபது கிரிக்கெட் அணியில் தேர்வு செய்யப்படாதது குறித்து அவர் கடும் ஏமாற்றமடைந்துள்ளார் என்று கூறியுள்ளார்.