ஒரு நாள் சர்வதேச ஐசிசி தரவரிசைப் பட்டியலில் இந்திய அணித்தலைவர் ராகுல் திராவிட் 8 இடங்கள் முன்னேறி 5ம் இடத்திற்கு வந்துள்ளார்.
அணியின் துணைத் தலைவராகவும், இருபதுக்கு இருபது உலகக் கோப்பை கிரிக்கெட் இந்திய அணித் தலைவராகவும் உயர்ந்த மகேந்திர சிங் தோனி 5வது இடத்திலிருந்து 15வது இடத்திற்கு சரிந்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்றுவரும் ஒரு நாள் தொடரின் முதல் 3 ஆட்டங்களில் முறையே திராவிட் 46, 92 (நாட் அவுட்) மற்றும் 56 என்று சீரான முறையில் ரன்கள் எடுத்து வருவதால் 8 இடங்கள் முன்னேறி 5ம் இடத்திற்கு உயர்ந்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்காக நடப்பு ஒரு நாள் தொடரில் அபாரமாக விளையாடி வரும் இயன் பெல் 15 இடங்கள் முன்னேறி தரவரிசையில் 14வது இடத்திற்கு உயர்ந்துள்ளார்.
ஐசிசி பந்து வீச்சு ஒரு நாள் தரவரிசையில் ஃபிளின்டாஃப் 5 இடங்கள் முன்னேறி 10வது இடத்திற்கும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 14வது இடத்திற்கும் உயர்ந்துள்ளனர்.
ஐசிசி ஒரு நாள் போட்டி பன்முக வீரர் தரவரிசையிலும் பிளின்டாப், தென் ஆப்பிரிக்க வீரர் ஷான் போலாக்கிற்கு அடுத்த படியாக 2ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
அணி வாரியான தர வரிசையில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்திற்கு எதிரான தொடரை வென்றால் இலங்கையை பின்னுக்கு தள்ளி 4வது இடத்திற்கு இந்திய அணி முன்னேறும்.