அமெரிக்காவில் நடைபெறும் டென்னிஸ் தொடர்களில் வெற்றிகளை பெற்று வரும் சானியா மிர்சா மகளிர் டென்னிஸ் ஒற்றையர் உலக தரவரிசையில் 27வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்!
அமெரிக்காவில் நேற்று நடந்து முடிந்த நியூ-ஹாவன் டென்னிஸ் இரட்டையர் போட்டியில் சானியா இணை சாம்பியன் பட்டம் வென்றது. இதனால் இரட்டையர் தரவரிசையில் 4 இடங்கள் முன்னேறியுள்ள சானியா தற்போது 20வது இடத்திற்கு வந்துள்ளார்.
இன்று தொடங்கவுள்ள அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடருக்கு முன்னோடியாக நடைபெற்ற சின்சினாட்டி ஓபன், ஸ்டான்ஃபோர்ட் ஓபன், சான்டீகோ டென்னிஸ், மற்றும் நியூஹாவன் ஆகிய தொடர்களில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் தரவரிசையில் முதல் 20 இடங்களுக்குள் இருக்கும் வீராங்கனைகளை சானியா வெற்றி பெற்றதால் ஒற்றையர் மற்றும் இடட்டையர் தரவரிசைகளில் சிறப்பான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
நியூஹாவன் டென்னிஸ் தொடரில் இத்தாலி வீராங்கனை சான்டாஞ்செலோ சானியாவின் இணையாக இருந்தார். ஆனால் அமெரிக்க ஓபன் கிராண்ட் ஸ்லாம் தொடரில் அமெரிக்க வீராங்கனை பெதானி மேட்டக் சானியாவுடன் இணைகிறார்.
சானியா-பெதானி மேட்டக் இணை லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற்ற டென்னிஸ் தொடரில் காலிறுதிக்குள் நுழைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.