Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பீஜிங் ஒலிம்பிக் : இந்திய குத்துச்சண்டை வீரர்கள் தயாராகின்றனர்

Advertiesment
பீஜிங் ஒலிம்பிக் : இந்திய குத்துச்சண்டை வீரர்கள் தயாராகின்றனர்

Webdunia

, வெள்ளி, 13 ஜூலை 2007 (20:30 IST)
PTI photographerPTI
சீனத் தலைநகர் பீஜிங்கில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதிபெற இந்திய குத்துச்சண்டை வீரர்கள் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தியாவின் தலைசிறந்த பாக்சர்களில் ஒருவராகத் திகழ்ந்த ஜி.எஸ். சாந்து மீண்டும் தேசப் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளது மட்டுமின்றி, நமது குத்துச் சண்டை வீரர்களுக்கு கூடுதல் பயிற்சி அளிக்க கியூபா நாட்டின் பயிற்சியாளர் பி.ஐ. பெர்னாண்டசின் ஒப்பந்தத்தையும் புதுப்பித்துள்ளது இந்திய அமைச்சூர் பாக்சிங் கூட்டமைப்பு.

சென்னையில் நடைபெற்று வரும் எஸ்.ஆர்.எம். - ஃபெடரேஷன் கோப்பை பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியை பார்வையிட வந்துள்ள இந்திய அமைச்சூர் பாக்சிங் கூட்டமைப்பின் பொதுச் செயலர் கர்னல் பி.கே. முரளிதரன் ராஜா, அமெரிக்காவில் உள்ள சிக்காக்கோ நகரில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 1 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள உலக பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியை ஒலிம்பிக் போட்டிகளில் நுழைவதற்கான தகுதியைப் பெற நமது பாக்சர்கள் தீவிர பயிற்சி எடுத்து வருவதாகவும் கூறினார்.

சிக்காக்கோ போட்டியில் காலிறுதிக்குத் தகுதிபெறும் பாக்சர்கள் அனைவரும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெற நேரடித் தகுதி பெறுவர்.

இப்போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ள இந்தியாவின் 8 முன்னணி பாக்சர்கள் தற்பொழுது கசகஸ்தான் சென்றுள்ளனர்.

சஞ்சய் போல்ட்டே (லைட் ஃபிளை), காமன்வெல்த் வெண்கலப் பதக்கம் வென்ற ஜித்தேந்தர் குமார் (ஃபெதர்), காமல்வெல்த்தில் தங்கம் வென்ற அகில்குமார் (பேண்ட்டம்), திவாகர் பிரசாத் (ஃபெதர்), ஜெய் பகவான் (லைட்), மனோஜ் குமார் (லைட் வெல்ட்டர்), தில்பா சிங் (வெல்ட்டர்), காமன்வெல்த் வெள்ளிப் பதக்கம் வென்ற விஜேந்தர் (மிடில்) ஆகிய 8 பேரும் கசகஸ்தானில் 4 வாரம் பயிற்சி பெறுகின்றனர்.

இந்த பயிற்சியின் முடிவில் அங்கு நடைபெறவுள்ள சர்வதேசப் போட்டியில் இவர்களும் களமிறங்குகின்றனர். கியூபா. ரஷ்யா. சீனா உள்ளிட்ட 19 நாடுகளின் வீரர்கள் இப்போட்டிகளில் கலந்துகொள்கின்றனர்.

சிக்காக்கோ உலக சாம்பியன்ஷிப் போட்டிகளுக்குப் பிறகு ஜனவரியில் பேங்காக், மார்ச்சில் கசகஸ்தான் நாடுகளில் நடைபெறும் சர்வதேச குத்துச்சண்டைப் போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்கவுள்ளனர் என்று கர்னல் முரளிதரன் ராஜா கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil