மூத்த வீரர்கள் அணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னரே அவர்களுடைய இடத்திற்கு திறமை வாய்ந்த இளம் வீரர்களை கொண்டு வரும் ஆஸ்ட்ரேலிய வழிமுறையை இந்தியாவும் கடைபிடிக்க வேண்டும் என்று ரிக்கி பாண்ட்டிங் கூறியுள்ளார்!
டெல்லியில் ஒரு நிறுவனத்தின் தயாரிப்புகளை அறிமுகப்படுத்த வந்துள்ள ஆஸ்ட்ரேலிய அணித் தலைவர் ரிக்கி பாண்ட்டிங், திறமை வாய்ந்த வீரர்கள் ஒரே நேரத்தில் ஓய்வு பெறும்போது அதற்குத் தக்கவாறு இளம் வீரர்களை அந்த இடத்திற்கு கொண்டு வருவதில் ஆஸ்ட்ரேலிய தேர்வாளர்கள் மிகச் சரியாக கையாண்டு வருகிறார்கள் என்று கூறினார்.
சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட், அனில் கும்ளே ஆகியோர் ஒரே நேரத்தில் அணியில் இருந்து வெளியேறினால் அது இந்திய அணியில் மிகப் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்திவிடும் என்றும், இந்த இடத்தில் ஆஸ்ட்ரேலிய தேர்வாளர்களை இந்திய கிரிக்கெட் வாரியம் பின்பற்ற வேண்டும் என்று பாண்ட்டிங் கேட்டுக் கொண்டார்.