ஃபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிக்குத் தகுதி பெற்ற செர்பிய வீராங்கனை ஆனா இவானோவிச்சிடம் 2வது சுற்றில் தோல்வியைத் தழுவிய சானியா மிர்சா, உலக மகளிர் தரவரிசைப் பட்டியலில் 8 இடங்கள் முன்னேறியுள்ளார்!
ஃபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகளுக்கு முன்னர் 50வது இடத்தில் இருந்த சானியா மிர்சா இந்த வாரம் வெளியிடப்பட்ட மகளிர் டென்னிஸ் சங்க தரவரிசைப் பட்டியலில் 42வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஆனால், இரட்டையர் பிரிவில் முதல் சுற்றிலேயே சானியா இணை தோற்றதால் 41வது இடத்திற்கு இறங்கியுள்ளார்.
ஃபிரெஞ்ச் ஓபன் ஆடவர் இரட்டையர் பிரிவில் அரையிறுதி வரை முன்னேறிய இந்தியாவின் மகேஷ் பூபதி - செக் குடியரசின் ராடேக் ஸ்டீபானேக் இணை 26வது இடத்தில் இருந்து 20வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இரட்டையர் தரவரிசைப் பட்டியலில் 6வது இடத்தில் இருந்த இந்தியாவின் லியாண்டர் பயஸ் - செக் குடியரசின் மார்டின் டாம் இணை 10வது இடத்திற்கு இறங்கியுள்ளது.