உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஒரு பெண் இரண்டாவது முறையாக ஓடும் ரயிலில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஜுபின் நிஷா நேற்று அவரது கணவரோடு குஷிநகர் எக்ஸ்ப்ரஸில் பயணம் செய்துகொண்டிருந்தார். நிறை மாத கர்ப்பிணியான அவர் பிரசவத்திற்காக அவரது சொந்த ஊரான கொன்டா என்னும் பகுதிக்கு சென்றுகொண்டிருந்தார்.குஷிநகர் எக்ஸ்பிரஸ் லக்னோ பகுதியை நெருங்கிகொண்டிருக்கும் போது, நிஷாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டது. ரயில் பெட்டியில் இருந்த பிற பெண் பயணிகளின் உதவியுடன் நிஷா அழகான ஆண் இரட்டையர்களை பெற்றெடுத்தார்.அருகில் உள்ள ரயில் நிலையத்தில், ரயில் நிறுத்தப்பட்டதை அடுத்து அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவர்கள் தாய் மற்றும் குழந்தைகளை குயின் மேரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.
ஜுபின் நிஷாவின் கணவரான ஹபிபுலா இது குறித்து கூறுகையில், தனக்கு ரயிலில் இரட்டை குழந்தைகள் பிறந்ததும், குழந்தைகளும் அவரது மனைவி நிஷாவும் உடல் நலத்துடன் இருப்பதும் மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
ஜுபின் நிஷா மற்றும் ஹபிபுலா ஜோடிக்கு ஓடும் இரயிலில் குழந்தை பெற்றுகொள்வது இது இரண்டாவது முறை. நான்கு வருடங்களுக்கு முன்பு, தனது முதல் பிரசவத்திற்காக ரயிலில் சென்றுகொண்டிருந்த ஜுபினுக்கு ரயிலிலேயே பிரசவ வலி ஏற்பட, முதல் இரட்டையர்களை பெற்றெடுத்தார்.
முதல் பிரசவத்தில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இரட்டையர்களை பெற்றெடுத்த இவருக்கு தற்போது அதே போல ஓடும் ரயிலில் ஆண் இரட்டையர்கள் பிறந்திருப்பது குறிப்பிடத்தக்கது.