முருகன், சாந்தன், பேரறிவாளனை தூக்கிலிடவேண்டாம் - தண்டனை விதித்த நீதிபதி
, திங்கள், 25 பிப்ரவரி 2013 (11:52 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை தூக்கிலிட கூடாது என அவர்களுக்கு மரண தண்டனையை உறுதிசெய்த உச்ச நீதிமன்ற அமர்வுக்கு தலைமை தாங்கிய முன்னாள் நீதிபதி கூறியுள்ளார்.ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1991 ஆம் ஆண்டு, மே மாதம் 21ஆம் தேதி முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார்.இச்சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் முருகன், சாந்தன், பேரறிவாளன், மற்றும் முருகனின் மனைவி நளினி ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. நளினி தரப்பில் முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீலுக்கு அனுப்பப்பட்ட கருணை மனுவை பரிசீலித்த பிறகு நளினியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.இந்த நிலையில், மரண தண்டனையை எதிர்நோக்கி வேலூர் சிறையில் காத்திருக்கும் அவர்களை தூக்கிலிடுவதை நிறுத்த வேண்டும் என இவர்கள் மூவரின் மரண தண்டனையையும் 1999 ஆம் ஆண்டு உறுதி செய்த உச்ச நீதிமன்ற அமர்வுக்கு தலைமை தாங்கிய முன்னாள் நீதிபதி கே.டி. தாமஸ் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் 22 ஆண்டுகளை சிறையில் கழித்துள்ளனர். இப்போது அவர்களை தூக்கிலிடுவது ஒரே குற்றத்துக்காக இரண்டு முறை அவர்களுக்கு தண்டனை விதிப்பது போல் ஆகிவிடும். இது நமது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. ஆயுள் தண்டனை காலத்திற்கும் மேலாக அவர்கள் சிறையில் தண்டனை அனுபவித்து விட்டதால் அவர்களின் மரண தண்டனை குறித்து கண்டிப்பாக ஜனாதிபதி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.