குடியரசு தின விழாவை சீர்க்குலைக்க டெல்லி அல்லது மும்பையில் தீவிரவாதிகள் தொடர் குண்டு வெடிப்பில் ஈடுபட கூடும் என்று உளவுத்துறை மத்திய உள்துறை அமைச்சகத்தை உஷார்படுத்தியுள்ளது.
தீவிரவாதி அஜ்மல் கசாபின் தூக்கு தண்டனைக்கு பழிவாங்க பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக டெல்லி அல்லது மும்பையில் தீவிரவாதிகள் தொடர் குண்டு வெடிப்பில் ஈடுபட கூடும் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நாடெங்கும் நாளை மறு நாள் கொண்டாடப்பட உள்ளது. இந்த கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் வகையில் டெல்லியில் குண்டு வெடிப்புகளை நடத்த பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பான லஷ்கர்- இ- தொய்பா திட்டமிட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
தெற்கு டெல்லியில் உள்ள கோவில், சாந்தினி சவுக், காந்தி நகர் மார்க்கெட் மற்றும் ஒரு மெட்ரோ ரெயில் நிலையம் ஆகிய 4 இடங்களில் குண்டுகளை வெடிக்க செய்ய தீவிரவாதிகள் ஏற்பாடு செய்து இருப்பதை உளவுத்துறை உறுதி செய்துள்ளது.
இதனை அடுத்து டெல்லி முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படி மத்திய அரசிடம் உளவுத்துறை கூறியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சந்தேகத்திற்குரிய நபர்களை சாதாரண உடையில் உள்ள காவலர்கள் கண்காணித்து வருகிறார்கள். வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே டெல்லியை தகர்க்க திட்டமிட்டுள்ள தீவிரவாதிகள் ஏற்கனவே மேற்கத்திய மாநில பனி சூழலை வைத்து இந்தியாவுக்குள் வந்து விட்டதாக உளவுத்துறை மீண்டும் எச்சரித்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற போர்வையில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக அத்தகவலில் கூறப்பட்டுள்ளது.
மேலும் டெல்லியை தகர்ப்பதற்கான வெடிபொருட்கள் மற்றும் மருந்துகளும் கூட கடந்த மாதமே டெல்லிக்குள் கொண்டு வரப்பட்டு விட்டதாக பல பகிரங்க தகவல்கள் வெளியாகி உள்ளது.