டெல்லி மாணவிக்காக நாடு முழுவதும் புத்தாண்டு புறக்கணிப்பு!
, திங்கள், 31 டிசம்பர் 2012 (15:57 IST)
டெல்லி மாணவி மரணத்தை அடுத்து புத்தாண்டு கொண்டாட்டங்களைப் புறக்கணிக்க இந்திய ராணுவ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அனைத்து மாணவர் அமைப்புகளும் இதே முடிவினை அறிவித்துள்ளனர்.கற்பழிப்பு கொடுமைக்கு ஆளாகி சிகிச்சை பலனின்றி சிங்கப்பூரில் உயிரிழந்த டெல்லி மாணவியின் உடல் நேற்று தகனம் செய்யப்பட்ட நிலையில் இந்திய ராணுவ வீரர்கள் அனைவரும் புத்தாண்டு கொண்டாட்டங்களைப் புறக்கணிக்க முடிவு செய்து ராணுவ அலுவலகங்கள் மற்றும் முகாம்களின் புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்க்கும்படி வீரர்களுக்கு உயரதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.இதேபோல மாணவிக்காக போராடி வரும் மாணவர் அமைப்புகளும் புத்தாண்டு கொண்டாட்டங்களை புறக்கணிக்கின்றனர். அவர்கள் தங்கள் சமூக வலைதளங்கள் மூலம் புத்தாண்டு கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.இதனை அடுத்து காங்கிரஸ் கட்சியினரும் புத்தாண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்க மாட்டார்கள் என அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார்.பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், தொழில் அமைப்புகள் சார்பிலும் நடைபெறும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.புத்தாண்டு கொண்டாடத்தில் ஈடுபட போவதில்லை என்று தெரிவித்துள்ள ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலோட், பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க அனைவரும் புத்தாண்டு சபதம் ஏற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.