வரவிருக்கும் ஆண்டில் டீசல் மற்றும் மண்எண்ணெய் விலை 10 ரூபாய் வரை அதிகரிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெட்ரோல் விலையை சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து வருகின்றன. ஆனால், டீசல், மண்எண்ணெய், சமையல் கியாஸ் ஆகியவற்றை மானிய விலையில் மத்திய அரசு வழங்கி வருகிறது.
இந்த நிலையில் உற்பத்தி விலையை விட குறைந்த விலைக்கு இப்பொருட்களை விற்று வருவதால், நடப்பு நிதி ஆண்டில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தலைதூக்கி இருக்கும் நிதி நெருக்கடியை ஈடுகட்ட டீசல் விலை அடுத்த 10 மாதங்களில் 10 ரூபாய் அளவுக்கு உயர்த்தப்படும் என்றும், மண் எண்ணெய்யின் விலை அடுத்த இரண்டு ஆண்டுகளில் 10 ரூபாய் வரை உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இப்பொருட்களின் விலைகளை அதிகரித்தால்தான் நிலைமையை சரிசெய்ய இயலும் என்ற ஆலோசனையை மத்திய அமைச்சரவைக்கு பெட்ரோலிய அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
இதுகுறித்து கலந்தாய்வில் ஈடுபட்டுள்ள மத்திய அரசு, டீசல், மண்எண்ணெய்யின் விலை உயர்த்தபடுகிறதா என்பதை தீர்மானிக்கும்.
விலை உயர்வு அமலுக்கு வந்தால் டிசல் விலையை ஒவ்வொரு மாதமும் 1 ரூபாய் என உயர்த்தி, 10 மாதங்களில் எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்த விலையை ஈடுசெய்ய திட்டமிடப்பட்டிருப்பதாக பெட்ரோலிய அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடைசியாக டீசல் விலை கடந்த செப்டம்பர் மாதம் ரூ.5.63 உயர்த்தப்பட்டது. மண்எண்ணெய் விலை கடந்த ஜூன் மாதம் அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.