கர்நாடக முதல்வர் சதானந்தா கவுடாவை மாற்றக் கோரி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த 9 பேரும் தங்கள் ராஜினாமாவை திரும்ப பெற்றுக் கொண்டனர். கடந்த 3 நாட்களாக நீடித்து வந்த பரபரப்பு சற்று தனிந்துள்ளது.
சுரங்க முறைகேடு தொடர்பாக தன் பதவியை ராஜினாமா செய்த கர்நாடக முதல்வராக எடியூரப்பா, தனது ஆதரவாளரான சதானந்த கவுடாவை முதல்வராக்கினார்.
ஆனால், முதல்வர் சதானந்த கவுடா எயூரப்பாவின் கைப்பாவையாக செயல்பட மறுத்துவிட்டார். இதையடுத்து சதானந்தா கவுடாவை உடனடியாக முதல்வர் பதவியில் இருந்து நீக்கி தனது தீவிர ஆதரவாளரான ஜெகதீஷ் ஷெட்டரை முதல்வராக எடியூரப்பா தீவிர முயற்சி எடுத்து வருகிறார்.
ஆனால் பா.ஜ.க. மேலிடம், கர்நாடகா முதல்வர் சதானந்த கவுடாவை மாற்றும் எண்ணமில்லை என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டது. இதையடுத்து, எடியூரப்பா ஆதரவாளர்களான 9 அமைச்சர்களும் கடந்த 29ஆம் தேதி தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து ஆளுநர் பரத்வாஜை சந்தித்து பேசிய முதல்வர் சதானந்தா கவுடா, இன்று டெல்லி விரைந்துள்ளார்.
இந்த நிலையில், பெங்களூருவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர், கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டதால் 9 அமைச்சர்களும் தங்கள் ராஜினாமா கடிதத்தை திரும்ப பெற்றுக் கொண்டனர் என்றார்.
பிரச்சனைக்கு சுமூக தீர்வு காணப்படும் என்று எடியூரப்பாவிடம் கட்சி மேலிடம் உறுதி அளித்துள்ளது என்றும் மேலிடம் அழைப்பை ஏற்று இன்று பிற்பகலில் டெல்லி செல்கிறோம் என்றும் ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.
சதானந்தாவை நீக்குவது குறித்து கட்சி மேலிடம் இதுவரை எந்த உறுதிமொழியும் தரவில்லை என்று கூறிய ஷெட்டர், டெல்லியில் இன்று இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும் என்றார்.