குஜராத் கலவரம் தொடர்பாக முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு எதிராக பேசிய ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு குஜராத் அரசை மத்திய அரசு கண்டிப்புடன் அறிவிறுத்தியுள்ளது.
கடந்த 2002 கலவரத்தின்போது வன்முறையில் ஈடுபடுபவர்கள் குறித்து கவலைகொள்ள வேண்டாம் என்று குஜாராத் முதல்வர் நரேந்திர மோடி போலீஸ் அதிகாரிகளிடம் தெரிவித்திருந்ததாக சஞ்சீவ் பட் குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும் கலவரத்தின்போது உதவிகோரி முஸ்லீம்கள் விடுத்த தொலைபேசி அழைப்புகளை புறக்கணிக்குமாறு போலீசாருக்கு மோடி உத்தரவிட்டதாகவும் பட் குற்றம்சாட்டியிருந்தார்.
இக்குற்றச்சாட்டு மோடிக்கு சிக்கலை ஏற்படுத்திய நிலையில், சஞ்சீவ் பட்டின் நடத்தை ஐபிஎஎஸ் அதிகாரிக்கு பொருத்தமற்ற வகையில் இருப்பதால் அவரை கடந்த ஆக்ஸ்ட் 8 ஆம் தேதியன்று பணி இடைநீக்கம் செய்து நரேந்திர மோடி அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து தமது கணவரின் உயிருக்கு மோடி அரசால் அச்சுறுத்தல் உள்ளதாக கூறி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு சஞ்சீவ் பட்டின் மனைவி நேற்று கடிதம் எழுதியிருந்தார்.
இந்த கடிதத்தின் எதிரொலியாக, சஞ்சீவ் பட்டின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சகம், குஜராத் அரசை கண்டிப்புடன் அறிவுறுத்தி உள்ளது.
அண்மையில் குஜராத் லோக்ஆயுக்தா நீதிபதி நியமன விடயத்தில் மத்திய அரசுக்கும், மோடி அரசுக்கும் மோதல் ஏற்பட்ட நிலையில்,தற்போது சஞ்சீவ் பட் விவகாரம் மூலம் இருதரப்புக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.