Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2ஜி கடிதம்: சுதி குறைத்த பிரணாப்; சிக்கல் தீர்ந்த சிதம்பரம்!

2ஜி கடிதம்: சுதி குறைத்த பிரணாப்; சிக்கல் தீர்ந்த சிதம்பரம்!
புதுடெல்லி , வியாழன், 29 செப்டம்பர் 2011 (19:23 IST)
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக தமது அமைச்சகம் பிரதமருக்கு எழுதிய கடிதம் தமது கருத்து அல்ல என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ள நிலையில், இது தொடர்பாக எழுந்த பிரச்சனை தீர்ந்ததாக ப.சிதம்பரம் அறிவித்துள்ளார்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நிகழ்ந்த முறைகேட்டை அப்போதைய நிதியமைச்சாரக இருந்த ப.சிதம்பரம் நினைத்திருந்தால் தடுத்திருந்திருக்கலாம் என்று மத்திய நிதியமைச்சகம்,பிரதமர் மன்மோகன் சிங்கிறகு ஒரு கடிதம் எழுதியிருந்தது.

இந்த கடிதம் குறித்த தகவல் வெளியாகி மத்திய அரசுக்கும்,சிதம்பரத்திற்கும் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்ததால்,காங்கிரஸ் கட்சியும் பெரும் நெருக்கடிக்கு உள்ளானது.அத்துடன் பிரணாப் - ப.சிதம்பரம் இடையேயும் பனிப்போர் ஏற்பட்டது.

இந்நிலையில், பிரணாப்பை காங்கிரஸ் தலைவர்கள் சிலர் நேற்றிரவு அவரது வீட்டில் சந்தித்து, இப்பிரச்சனைக்கு தீர்வு காண உதவுமாறு கேட்டுக்கொண்டதோடு, சிதம்பரம் மீது தவறு ஏதும் இல்லை என்ற அர்த்தம் தொனிக்கும் அறிவிப்பு ஒன்றையும் வெளியிடுமாறு கேட்டுக்கொண்டதாகவும் தெரிகிறது.

இந்நிலையில் இன்று மாலை பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார் பிரணாப்.அப்போது ப.சிதம்பரம், கபில் சிபல் ஆகியோரும் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரணாப், 2ஜி ஒதுக்கீடு குறித்து தமது அமைச்சக அதிகாரி பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் இடம்பெற்ற கருத்து தம்முடையதல்ல என்றும், அது 2ஜி பிரச்சனை குறித்து எல்லாவித கண்ணோட்டத்திலும் அமைச்சகங்களுக்கிடையே பரிமாறிக்கொள்ளப்பட்ட கருத்துக்கள் என்றும் கூறினார்.

பிரணப்பின் இந்த கருத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், பிரணாப்பின் இந்த கருத்து தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்றும்,பிரணாப் கூறியதை தாம் ஏற்றுக்கொள்வதாகவும், இத்துடன் பிரச்சனை தீர்ந்தது என்றும் கூறினார்.

பிரணாப்பையும், சிதம்பரத்தையும் சமாதானப்படுத்தி கட்சிக்குள்ளும், அரசுக்குள்ளும் ஏற்பட்ட நெருக்கடியை காங்கிரஸ் தீர்த்துள்ள போதிலும், எதிர்கட்சிகளை எப்படி சமாளிக்கப்போகிறது என்று தெரியவில்லை.

மேலும் 2ஜி விவகாரத்தில் பிரணாப்பின் கடிதம் மூலம் சிதம்பரத்திற்கு வந்த கத்தி தலைப்பாகையோடு போனாலும்,இது விடயத்தில் ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சாமி வீசிய கத்தி இன்னும் தொங்கிக்கொண்டுதான் இருக்கிறது!


Share this Story:

Follow Webdunia tamil