பாரதீய ஜனதா தலைவர் எல்.கே.அத்வானி ஊழலை எதிர்த்து நாடு முழுவதும் ரதயாத்திரை செல்ல திட்டமிட்டுள்ளார். இந்த ரதயாத்திரையை பீகாரில் அக்டோபர் மாதம் 11ஆம் தேதி பீகார் முதல்வர் நிதீஷ் குமார் தொடங்கி வைக்கிறார்.
வருகிற அக்டோபர் மாதம் 11-ந்தேதி பீகாரில் அத்வானி ரத யாத்திரையை தொடங்குகிறார். மறைந்த சோசலிஸ்ட் தலைவரான ஜெயப்பிரகாஷ் நாராயணன் பிறந்த ஊரான சாரன் மாவட்டம் சித்தாப்டியரா கிராமத்தில் அத்வானி ரதயாத்திரை தொடக்க நிகழ்ச்சி நடக்கிறது.
இதில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் கலந்து கொண்டு அத்வானியின் ரதயாத்திரையை கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார். சமீப காலமாக நிதிஷ்குமார் பாரதீய ஜனதாவுடன் அதிருப்தியில் இருந்தார். நரேந்திரமோடி உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளவில்லை. அதுபற்றியும் கருத்து தெரிவிக்காமல் இருந்தார்.
இதனால் நிதிஷ்குமாரை சமரசப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பாரதீய ஜனதா தலைவர் நிதின் கட்காரி, நிதிஷ்குமாருடன் தொடர்பு கொண்டு அத்வானியின் ரதயாத்திரையை தொடங்கி வைக்க வருமாறு அழைப்பு விடுத்தார். இதை அவர் ஏற்றுக் கொண்டு விட்டார். இந்த தகவலை பாரதீய ஜனதா செய்தி தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.