தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடுவின் குடும்ப சொத்து மதிப்பு 38 கோடி ரூபாய். இந்த சொத்து மதிப்பை சந்திரபாபுவே வெளியிட்டுள்ளார்.
காந்தியவாதி அண்ணா ஹசாரே கைது செய்யப்பட்டபோது 10 கி.மீட்டருக்கு பாதை யாத்திரை மேற்கொண்ட சந்திரபாபு நாயுடு, ரூ.2 ஆயிரம் கோடி சொத்து சேர்த்ததாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாற்றின.
இந்த நிலையில், தனது சொத்து விபரங்களை சந்திரபாபு நாயுடு பகிரங்கமாக வெளியிட்டுள்ளார். தனிப்பட்ட முறையில் ரூ.39 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் சொத்துகள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மனைவி புவனேஸ்வரி பெயரில் ரூ.39 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகளும், குடும்ப நிறுவனமான 'ஹெரிடேஜ் புட்ஸ்' நிறுவனத்தின் தலைவராகவும் புவனேஸ்வரி செயல்படுகிறார் என்றும் சந்திரபாபு கூறியுள்ளார்.
புவனேஸ்வரிக்கு ரூ.12 கோடியே 38 லட்சம் கடன் இருப்பதால் நிகர சொத்து மதிப்பு ரூ.27 கோடியே 18 லட்சம் என்றும் ஹைதராபாத் ஜுபிளி ஹில்ஸ் பகுதியில் எங்கள் குடும்பம் வசித்து வரும் வீடு, வங்கிக் கடனில் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மகன் லோகேஷ் பெயரில் ரூ.6 கோடியே 82 லட்சம் சொத்து இருப்பதாக கூறிய சந்திரபாபு, ஆனால், ரூ.9 கோடிக்கு கடன் உள்ளது என்றும் கூறியுள்ளார்.
மருமகள் பிராமணி பெயரில் ரூ.3 கோடியே 22 லட்சம் சொத்து உள்ளது என்றும் இது, அவருடைய தந்தையான நடிகர் பாலகிருஷ்ணா அளித்தது என்றும் திருமணத்துக்கு பிறகு, பிராமணி பெயரில் எந்த சொத்துகளையும் நாங்கள் வாங்கவில்லை என்றும் சந்திரபாபு தெரிவித்துள்ளார்.
தனிநபர் சொத்துகளை தவிர்த்து நிர்வனா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தில் எங்கள் குடும்பத்துக்கு ரூ.15 கோடியே 75 லட்சம் மதிப்பில் பங்குகள் உள்ளன. ஆனால், ரூ.15 கோடியே 37 லட்சம் கடன் இருக்கிறது என்றும் சந்திரபாபு கூறியுள்ளார்.
''எங்களுடைய குடும்ப நிறுவனமான 'ஹெரிடேஜ் புட்ஸ்', பொதுத் துறை நிறுவனமாக பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. தற்போது, அதன் ஒரு பங்கு மதிப்பு ரூ.172 ஆகும். நிறுவனத்தின் மொத்த சந்தை முதலீட்டு மதிப்பு ரூ.214 கோடி. எங்கள் குடும்பத்திடம் நிறுவனத்தின் 48.82 சதவீத பங்குகள் உள்ளன. அதே நேரத்தில், அந்த நிறுவனத்தின் பெயரில் ரூ.95 கோடி அளவுக்கு கடன் இருக்கிறது'' என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.