லோக்பால் மசோதா தொடர்பாக பிரதமர் அலுவலகத்துடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று காந்தியவாதியான அண்ணா ஹசாரே திட்டவட்டமாக கூறியுள்ளார்.
வலுவான் லோக்பால் மசோதாவை வலியுறுத்தி டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஹசாரே நடத்தி வரும் உண்ணாவிரத போராட்டத்தினால் மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதனால் ஹசாரேவின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக, சில தனிநபர்கள் மூலமாக மத்திய அரசு அவருடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்து வருகிறது.
இந்நிலையில் லோக்பால் மசோதா தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தாம் தயார் என்றும், அதே சமயம் அரசு சாரா நபர்களுடன் பேச்சு நடத்த தயாரில்லை என்றும் ஹசாரே இன்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஹசாரே குழுவினர்களுடன் சில மத்தியஸ்தர்களை அனுப்பி பேச்சு நடத்த மத்திய அரசு முயற்சிப்பது ஹசாரேவை அதிருப்தியடைய வைத்துள்ளதாகவும், இதனால் பிரதமர் அலுவலகம் அல்லது ராகுல் காந்தி ஆகியோருடன் மட்டுமே தம்மால் பேச்சு நடத்த முடியும் என்றும் ஹசாரே கூறியுள்ளார்.
டெல்லி ராம்லீலா மைதானத்தில் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த அவர், லோக்பால் பிரச்சனையில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டையை நீக்க அரசு விரும்பினால், லோக்பால் மசோதாவில் இடம்பெற்றுள்ள அரசின் கருத்துக்கள் உடனடியாக திரும்ப பெறப்பட வேண்டும் என்றார்.
மேலும் பேச்சுவார்த்தைக்காக இதுவரை அரசு தரப்பிலிருந்து எந்த ஒரு பிரதிநிதியும் தம்மை நேரடியாக அணுகவில்லை என்றார்.