காமன்வெல்த் போட்டி முறைகேடுகள் குறித்த சிஏஜி அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் குறித்தும் முறைகேடுகள் குறித்தும் குறிக்கப்பிடப்பட்டுள்ளதால் எதிர்க்கட்சியான பாஜக, ஷீலா தீட்சித் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.
அதற்கு பதிலளித்த மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித், சிஏஜி அறிக்கையுடன், லோக் ஆயுக்த அறிக்கையை ஒப்பிடக்கூடாது என்று கூறினார். லோக் ஆயுக்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்ட கர்நாடக முதல்வர் எடியூரப்பா, பதவி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், குர்ஷித் இது குறித்து குறிப்பிடும்போது, இந்த அறிக்கை நாடாளுமன்றம் முன்னர்தான் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து விவாதம் நடத்த வாய்ப்பு உள்ளது.
ஏதாவது ஒரு ஒப்பந்ததாரர் மூலமாக நஷ்டம் ஏற்பட்டதாகக் கருதினாலோ, அந்த ஒப்பந்ததாரர் முறைகேட்டில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இருந்தாலோ, அல்லது அந்த குறிப்பிட்ட ஒப்பந்ததாரரைக் காட்டிலும் சிறந்த ஒப்பந்தப் புள்ளிகளுடன் வேறு ஒரு ஒப்பந்ததாரர் கலந்துகொண்டதற்கான வாய்ப்பு இருந்தாலோ இது குறித்து கேள்வி எழுப்பவும் விளக்கம் அளிக்கவும் வகை உண்டு. ஆனால், கர்நாடகத்தில் நடந்தது இதுபோன்றதில்லை என்றார் அவர்.
இன்று நாடாளுமன்றத்துக்கு வெளியே கூடியிருந்த செய்தியாளர்களிடம் பேசியபோது இதைத் தெரிவித்தார் அவர். எடியூரப்பா பதவி விலகியதைப் போன்று ஷீலா தீட்சித்தும் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை நியாயமற்றது. இது சூழ்நிலைக்கு அப்பாற்பட்டது என்றார் அவர்.
எடியூரப்பா மீது சாட்டப்பட்ட குற்றத்தின் தீவிரத்தன்மையை நாம் பார்க்க வேண்டும். சுரங்க முறைகேடுகளால் சுற்றுச்சூழலுக்கும் புவியின் தன்மைக்கும் அல்லவா பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் இது அப்படி இல்லையே என்று கேள்வி எழுப்பினார்.
ஷீலா தீட்சித் பதவி விலகுமாறு எதிர்க்கட்சிகள் கேட்பதற்கான காரணம் இதுவாக இருக்குமானால், அது தேவையற்றது. இது விஷயத்தில் நான் ஒன்றும் சொல்ல இயலாது. நாடாளுமன்றத்தின் முன்னர் இது வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் இதில் சரியானபடி எதிரொலிக்க ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என்றார் அவர்.