வரவிருக்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் மும்பை குண்டுவெடிப்பு, ஊழல் மற்றும் கறுப்பு பண பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை மத்திய அரசை திணறடிக்க பா.ஜனதா முடிவு செய்துள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வருகிற திங்களன்று தொடங்க உள்ள நிலையில், இந்த கூட்டத்தொடரில் எழுப்பப்பட வேண்டிய பிரச்சனைகள் மற்றும் அணுகுமுறைகள் குறித்து விவாதிப்பதற்காக நாடாளுமன்ற பா.ஜனதா கட்சியின் நிர்வாகக் குழு கூட்டம்,அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானியின் இல்லத்தில் இன்று நடைபெற்றது.
அப்போது நாடாளுமன்றத்தில் மும்பை குண்டுவெடிப்பு, மாவோயிஸ்ட் வன்முறை, ஊழல் மற்றும் கறுப்பு பணம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப முடிவு செய்யப்பட்டது.
கூட்டம் முடிவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த மக்களவை எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், நாடாளுமன்ற அவை விதி 193 ன் கீழ் மும்பை குண்டுவெடிப்பு தாக்குதலை குறிப்பிட்டு உள்நாட்டு பாதுகாப்பு குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று தாங்கள் கோரியுள்ளதாக தெரிவித்தார்.
இந்த கூட்டத்தொடரில் மேற்கூறிய பிரச்சனை தவிர விலைவாசி உயர்வு, தெலங்கானா பிரச்சனை, இந்திய (தமிழக) மீனவர்கள் கைது செய்யப்படுவது, சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு மற்றும் விவசாயிகளிடமிருந்து நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பிரச்சனைகளையும் எழுப்ப உள்ளதாக அவர் மேலும் கூறினார்.