இலங்கை, இந்தியாவிற்கு எதிராக செயற்படக் கூடிய அபாயம் நிலவி வருவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கும் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
இலங்கை அரசாங்கம், சீனா மற்றும் பாகிஸ்தானுடன் இணைந்து இந்தியாவிற்கு எதிராக செயற்படக் கூடிய ஆபத்து காணப்படுகிறது.
பாகிஸ்தானைப் போன்றே சீனாவும் பல வழிகளில் இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக திகழ்கின்றது.
நேபாளம் மற்றும் இலங்கையுடன் மேற்கூறிய இரண்டு நாடுகளும் இணைந்து கொண்டு இந்தியாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடும்.
இலங்கைக்கு எதிராக அழுத்தங்களை பிரயோகிக்குமாறு மத்திய அரசாங்கத்தை தொடர்ச்சியாக நான் வலியுறுத்தப்போகிறேன்.
பொருளாதாரத் தடை விதித்தல் மற்றும் கச்சதீவை மீட்பது ஆகிய தீர்மானங்கள் ஏற்கனவே இலங்கைக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று அந்த பேட்டியில் ஜெயலலிதா கூறியுள்ளார்.