மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டியின் சகோதரி மகள் கொலை செய்யப்பட்டுள்ளதை பிரேத பரிசோதனை அறிக்கை உறுதி செய்துள்ளது.
மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டியின் மூத்த சகோதரியான பாரதி. இவரது மகள் கிரண் ரெட்டி (26), ஹைதராபாத்தில் உள்ள ஜூபிலி ஹில்ஸ் பகுதியில்,தனது கணவருடன் வசித்து வந்தார்.
தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணிபுரிந்து வந்த கிரண்ரெட்டி, கடந்த ஞாயிற்றுக்கிழமை கிரண் ரெட்டி, தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், அவரது பிரேத பரிசோதனை அறிக்கை காவல்துறையினரிடம் இன்று அளிக்கப்பட்டது.
அதில், மூச்சு திணறடிக்கப்பட்டு கிரண் ரெட்டி உயிரிழந்துள்ளார் என்றும், இதனால் அவர் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியாகி உள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அவரது கணவர் சைதன்ய ரெட்டியை காவல்துறையினர் கைது செய்தனர். ஆனால், தான் நிரபராதி என்றும், கொலை செய்ததாக ஒப்புக் கொள்ளுமாறு காவல்துறையினர் தன்னை துன்புறுத்துகின்றனர் என்றும் சைதன்ய ரெட்டி கூறியுள்ளார்.