இந்தியா முழுவதும் வங்கி ஊழியர்கள் வரும் 7ஆம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.
அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க செயலாளர் விஷ்வாஸ் உதாகி கூறுகையில், வங்கித்துறையில் அன்னிய முதலீட்டை எதிர்த்து இந்த வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. வங்கிகள் கட்டுப்பாடு சட்டத்தை திருத்தி, அன்னிய வங்கிகளுக்கு தற்போது அளிக்கப்பட்டு வரும் 10 சதவீத ஓட்டு உரிமையை அதிகரிக்க, மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதை நடைமுறைப்படுத்தக்கூடாது என்று வற்புறுத்துகிறோம்.
இந்த வேலை நிறுத்தத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொள்கிறார்கள். இதற்கான தாக்கீதை, இந்திய வங்கிகளின் சங்கத்துக்கும், தொழிலாளர் ஆணையருக்கும் ஏற்கனவே அனுப்பி விட்டோம்.
வங்கி ஊழியர்களின் ஐக்கிய சங்கமும் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கிறது. இந்த வேலை நிறுவத்தத்தில், இந்தியாவில் உள்ள தனியார் வங்கி ஊழியர்களும் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்து இருக்கிறார்கள் என்று உதாகி கூறினார்.