ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா வரைவு தொடர்பாக அரசு தரப்பு மற்றும் குடிமக்கள் பிரதிநிதிகள் குழுவினருக்கு இடையே நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் ஒருமித்த கருத்து எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்தது.
லோக்பால் மசோதா வரைவு தொடர்பான அம்சங்களில் 85 விழுக்காடு நிறைவடைந்துவிட்டதாகவும், ஒரு சில முக்கிய விடயங்களில், குறிப்பாக லோக்பால் மசோதா வரம்புக்குள் பிரதமரையும் சேர்க்க வேண்டும் என்பதில் கருத்துவேறுபாடு நிலவுவதாகவும், அரசு தரப்பு பிரதிநிதிகளில் ஒருவரான மத்திய அமைச்சர் கபில் சிபல் நேற்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற இறுதிக்கட்ட ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய விடயங்களில் இருதரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்படாததால், ஒருமித்த லோக்பால் மசோதா வரைவு உருவாகாமல் கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது.
கூட்டம் முடிவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கபில் சிபல், எட்டு முக்கிய பிரச்சனைகளில் இருதரப்புக்குமிடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடுகளை தீர்க்க முடியவில்லை என்றார்.