Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கனிமொழியின் பிணை மனுவை விசாரிக்கும் நீதிபதிகள் விலகல்

கனிமொழியின் பிணை மனுவை விசாரிக்கும் நீதிபதிகள் விலகல்
புதுடெல்லி , வெள்ளி, 17 ஜூன் 2011 (19:41 IST)
2ஜி ஊழல் வழக்கில் கைதாகி சிறையிலிருக்கும் கனிமொழி பிணை மனுவை விசாரித்து வந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இரண்டு பேர், இவ்வழக்கிலிருந்து தாங்கள் விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளனர்.

கனிமொழி பிணை மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வில் இடம்பெற்ற நீதிபதிகள் பி.சதாசிவம் மற்றும் ஏ.கே. பட்நாயக் ஆகிய இருவருமே அந்த நீதிபதிகள் ஆவர்.

விலகலுக்கான காரணம் உடனடியாக தெரியவராத நிலையில், ஏதாவது நிர்ப்பந்தங்கள் கொடுக்கப்பட்டு அதனை ஏற்றுக்கொள்ள முடியாமலோ அல்லது பிணை மனு மீது தீர்ப்பளிப்பதில் மற்ற நீதிபதியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாகவோ இந்த விலகல் நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இருப்பினும் உண்மையான காரணங்கள் பின்னரே தெரியவரும். இதனிடையே மேற்கூறிய நீதிபதிகள் 2 பேரும் விலகியதை தொடர்ந்து,அவர்களுக்குப் பதிலாக கனிமொழி பிணை மனுவை வரும் திங்கட்கிழமையன்று விசாரிக்க உள்ள அமர்வில் நீதிபதிகள் சிங்வி மற்றும் பி.எஸ். சவுகான் ஆகியோர் இடம்பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கனிமொழி மற்றும் கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோரை பிணையில் விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து, உச்சநீதிமன்றத்தில் சிபிஐ இன்று பதில் மனு தாக்கல் செய்தது.

2ஜி வழக்கில் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் உச்சநீதிமன்றம் அவர்களுக்கு பிணை வழங்குவது முறையானதாக இருக்காது என்றும், இவர்களை விடுவித்தால் சாட்சிகளையும், ஆதாரங்களையும் அழித்துவிடுவர் என்றும் சிபிஐ அதில் தெரிவித்துள்ளது.

மேலும் சிபிஐ சிறப்பு நீதிமன்றமும், பின்னர் டெல்லி உயர்நீதிமன்றமும் பல்வேறு ஆவண ஆதாரங்களையும், இதர விவகாரங்களையும் கவனமாக பரிசீலித்து அவர்களுக்கு பிணை வழங்க மறுத்ததாகவும் சிபிஐ அதில் குறிப்பிட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil