அஸ்ஸாம் அருகே கஞ்சன் ஜங்கா விரைவு இரயில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
கஞ்சன் ஜங்கா விரைவு இரயில் இன்று அதிகாலை அஸ்ஸாம் அருகே வந்து கொண்டிருந்தபோது ஒரு பை அநாதையாக கிடப்பதை பார்த்து பயணிகள் இரயில்வே காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கவுகாத்தி இரயில் நிலையத்தில் உடனடியாக இரயில் நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த பையை கைப்பற்றிய வெடிகுண்டு நிபுணர்கள் அதை பிரித்து பார்த்தபோது சக்தி வாய்ந்த குண்டு இருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து வெடிகுண்டை நிபுணர்கள் செயலிழக்க செய்தனர். உரிய நேரத்தில் வெடிகுண்டு செயலிழக்க செய்யப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
கஞ்சன் ஜங்கா விரைவு இரயிலை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது குறித்து இரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.