இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த போரில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ள நிலையில், இந்தியாவின் அயலுறவுச் செயலர் நிருபமா ராவ், தேசப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் ஆகியோரை உள்ளடக்கியக் குழு கொழும்பு செல்கிறது.
வரும் 16,17ஆம் தேதிகளில் இக்குழு கொழும்புவில் இருக்கும் என்றும், அப்போது ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை, அந்நாட்டு அயலுறவு அமைச்சர் ஜி.எல்.பெய்ரீஸ் கடந்த மாதம் 15,16,17ஆம் தேதிகளில் டெல்லி வந்திருந்தபோது வெளியிடப்பட்ட கூட்டறிக்கை ஆகியன குறித்து சிறிலங்க அரசுடன் அவர்கள் பேசுவார்கள் என்று கூறப்படுகிறது.
இக்குழுவில் இந்தியாவின் பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமாரும் இருப்பார் என்று கொழும்புச் செய்திகள் கூறுகின்றன. இந்த குழுவின் பயணம் ஏற்கனவே திட்டமிடப்பட்டதுதான் என்றாலும், அயலுறவு அமைச்சர் பெய்ரீஸின் வருகையினால் தள்ளிப்போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.