ரூ.2,700 கோடி வரை கடன் வைத்துள்ளதால் எரிபொருள் வழங்குவதை எண்ணெய் நிறுவனங்கள் மறுத்துவிட்டதால் ஏர் இந்தியாவுக்கு சொந்தமான 60 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனத்திடம் 320 விமானங்கள் உள்ளன. உள்நாடு, அயல்நாடுகளுக்கு செல்லும் இந்த விமானங்களுக்கு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவற்றிடம் இருந்து எரிபொருள் வாங்கப்படுகிறது.
3 பொதுத் துறை நிறுவனங்களிடமும் சேர்த்து மொத்தம் ரூ.2,700 கோடி வரை ஏர் இந்தியா கடன் வைத்துள்ளதால் கடந்த 27ஆம் தேதி முதல் எரிபொருள் வழங்குவதை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தின. இதனால் ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. எனினும், சிவில் விமான போக்குவரத்து துறை தலையிட்டதால் அன்று மாலையிலே விமானப் போக்குவரத்து சீரானது.
இந்த நிலையில் நேற்று மீண்டும் எரிபொருள் சப்ளை நிறுத்தப்பட்டது. இதனால், ஏர் இந்தியாவுக்கு சொந்தமான 60 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், பல்வேறு விமானங்களின் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன.