மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது ஏர்செல் நிறுவனத்திற்கு முறைகேடாக 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறதா என்பதை மத்திய புலனாய்வுக் கழகம் ஆராய்ந்து வருகிறது.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய புலனாய்வுக் கழகத்தின் (சிபிஐ) பேச்சாளர் தாரிணி மிஸ்ரா, “2001 முதல் 2007ஆம் ஆண்டு வரை 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பான விவரங்களை ம.பு.க. தீவிரமாக ஆராய்ந்து வருகிறது” என்று கூறியுள்ளார்.
எனவே, அப்போது தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதி மாறனிடமும் விசாரணை நடத்தப்படும் என்பதை ம.பு.க. மறுக்கவில்லை. இதற்குக் காரணம், தயாநிதி மாறன் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்தபோது ஏர்செல் நிறுவனத்திற்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, ஏர்செல் நிறுவனத்தை பின்னாளில் வாங்கிய மலேசியாவின் மாக்சிஸ் நிறுவனத்திற்கும், சன் தொலைக்காட்சிக்கும் இடையே நடந்த பணப் பரிமாற்றங்களை ம.பு.க. பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த புலனாய்வின் அடிப்படையில் வரும் ஜூலை மாதத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து தனது விசாரணையை ம.பு.க. தொடங்கும் என்று கூறப்படுகிறது.