அயோத்தி வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்களின் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நாளை நடைபெற உள்ளது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை 3 பகுதிகளாகப் பிரித்து முஸ்லீம்கள், இந்துக்கள் மற்றும் நிர்மோஹி அகாராக்களுக்கு வழங்க வேண்டும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து நிர்மோஹி அகாரா, அகில பாரத இந்து மகாசபா, ஜமைத் உலமா-ஐ-ஹிந்த் மற்றும் சன்னி மத்திய வக்ஃப் வாரியம் ஆகிய மத அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.
ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படாமல், நம்பிக்கையின் அடிப்படையில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாகவும், எனவே அதை ரத்துசெய்ய வேண்டும் என்றும் வக்ஃப் வாரியம் மற்றும் ஜமைத் உலமா-ஐ-ஹிந்த் ஆகிய அமைப்புகள் தங்கள் மனுக்களில் குறிப்பிட்டுள்ளன.
ராமர் பிறந்த இடத்தில் அந்த கட்டடம் இருந்தது என தவறாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இம்மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அப்டாப் ஆலம் மற்றும் ஆர்.எம்.லோதா ஆகியோர் கொண்ட அமர்வு நாளை விசாரிக்க உள்ளது.