எஸ்-பேண்ட் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தவறு நிகழ்ந்துவிட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி கூறியுள்ளார்.
முன்னதாக எஸ்-பேண்ட் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஊழல் நடந்துள்ளதாகவும், இதனால் அரசுக்கு சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் இழப்பு என்றும் புகார் எழுந்தது.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, எஸ்-பேண்ட் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான இஸ்ரோவின் ஆண்ட்ரிக்ஸ் நிறுவனத்திற்கும், தனியார் நிறுவனமான தேவாஸ் மல்டிமீடியா நிறுவனத்திற்கும் இடையேயான ஒப்பந்தத்தை ரத்து செய்வது என்று பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை கமிட்டி இன்று முடிவு செய்தது.
இந்நிலையில்,டெல்லியில் இன்று இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி, எஸ்-பேண்ட் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தவறு நிகழ்ந்துவிட்டதாக கூறினார்.
எஸ்-பேண்ட் ஸ்பெக்ட்ரம் நமது மிகவும் மதிப்பு வாய்ந்த சொத்து ஆகும். இதில் அவர்கள் (இஸ்ரோ) சில தவறுகளை செய்துவிட்டார்கள் என்றும் கூறிய அவர், பாதுகாப்பு படைகளின் உடமைகள் சம்பந்தப்பட்ட இந்த ஒப்பந்தம் தொடர்பாக தமது அமைச்சகம் கலந்தாலோசிக்கப்படவில்லை என்றும் குற்றம்சாற்றினார்.
எதிர்காலத்திலாவது இதுபோன்ற ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு விடயத்தில் பாதுகாப்பு படையினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தாம் நம்புவதாக அவர் மேலும் கூறினார்.