லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் மற்றும் கடல்கொள்ளையர்களின் அச்சுறுத்தலை சமாளிக்கும்விதமாக தென்னிந்தியப் பகுதிகளில் போர் விமானங்களை நிறுத்த இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளது.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த இந்திய விமானப்படையின் துணைத் தலைவர் ஏர் மார்ஷல் பி.கே.பர்போரா, மேலும் கூறியதாவது:
எல்சிஏ போர் விமானங்களின் 2 பிரிவுகள் தென்னிந்தியாவை அடிப்படையாகக் கொண்டிருக்கும். எம்-எம்ஆர்சிஏ ரக போர் விமானங்கள் அல்லது சு -30 எம்கேஐ ரக போர் விமானங்கள் ஆகியவற்றில் ஏதாவது ஒரு பிரிவும் அங்கு நிறுத்தப்படும்.
தென்னிந்தியாவிலும், அந்தமான் நிகோபர் தீவுகளிலும் விமானப்படையின் பங்கை அதிகரிப்பது குறித்து தீவிரமாக சிந்தித்து வருகிறோம்.
தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் சூளூரில் எல்சிஏ போர் விமானங்களில் 2 பிரிவுகளை நிறுத்த விமானப்படை திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.