2ஜி அலைக்கற்றை முறைகேடுகளை விசாரிக்க நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைக்கும் வாய்ப்பேயில்லை என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
ஆனால் நாடாளுமன்றக் கூட்டத்தொடரை அமைதியாக நடைபெறவிடும்படி அவர் எதிர்கட்சிகளிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
"நாடாளுமன்றக்கூட்டுக் குழு என்றால் என்ன? அது என்ன சொர்க்கத்திலிருந்தா வருகிறது? அதனை அமைப்பதில் எந்த வித தர்க்கமோ, நியாயமோ இருப்பதாக எனக்குத் தெரியவில்லை." என்றார் பிரணாப் முகர்ஜி.
"நாங்கள் எதிர்கட்சிகளின் வாதங்களை கேட்கிறோம், ஆனால் அவர்கள் நாடாளுமன்றச் செயல்பாடுகளை முடக்காமல் சகஜ நிலைக்கு வழிவகுக்கவேண்டும்." என்றார்.
நாடாளுமன்றக் கூட்டுக்குழு என்ன செய்யும். அது ஆவணங்களையும், சாட்சிகளையும் ஆய்வு செய்யும், அதன் பிறகு இதுதான் எங்கள் அறிக்கை, இப்போது குற்றவாளி மீது நடவடிக்கை எடுங்கள் என்று கூறும். இதைத்தான் அரசும் தற்போது செய்து வருகிறது.
மத்தியப் புலனாய்வுக் கழகம், வருமானவரித் துறை, அமலக்க இயக்ககம் ஆகிய நடைமுறைகள் ஏற்கனவே துவங்கியுள்ளன. அக்டோபர் 2009-இல் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்பட்டது. இவற்றை மீறி நாடாளுமன்றக்கூட்டுக் குழு என்ன சாதித்து விட முடியும்? இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் பிரணாப் முகர்ஜி.
இதனால் எதிர்கட்சிகள் இதுபற்றிய விவாத்தை அனுமதிக்கவேண்டும் அப்போதுதான் மக்களுக்கு உண்மை நிலவரம் தெரியவரும். நாடாளுமன்ற ஜனநாயகம் என்பதே வாதம், விவாதம், தீர்மானங்கள் பற்றியதுதானே.
ஆனால் இங்கு எதிர்கட்சிகள் என்ன செய்கின்றனர். காலை 11.00 மணிக்கு நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் தங்கள் இருக்கையில் அமர்வதற்கு முன்னரே ஒரு சிலர் கோஷம் எழுப்பி, ரகளை செய்கின்றனர். இதனால் ஒட்டுமொத்த குளிர்காலக் கூட்டத்தொடரும் பாழாகிவிட்டது. என்று சாடியுள்ளார் பிரணாப் முகர்ஜி.