''கர்நாடகத்தில் நிலமோசடியில் ஈடுபட்டுள்ள பா.ஜ.க ஊழல் குறித்து பேச அருகதையற்றது'' என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
டெல்லியின் புறநகராக புராரியில் நடைபெற்று வரும் காங்கிரஸ் கட்சியின் 83வது தேசிய மாநாட்டில் பேசிய சோனியா காந்தி, குற்றம் சொல்வதற்கு முன்னாள் தம்முடைய தவறுகளை திருத்திக் கொள்ள பா.ஜ.க. முன்வர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
கர்நாடகாவில் பா.ஜ.க. பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறியுள்ள சோனியா, ஊழலில் தொடர்புடைய தலைவர்களை பா.ஜ.க. பதவி நீக்கம் செய்ய முன்வந்துள்ளதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆதர்ஷ், காமன்வெல்த் உள்ளிட்ட பிரச்சனைகளில் மத்திய அரசு விவாதத்திற்கு தயாராக இருந்தபோதும் பா.ஜ.க. நாடாளுமன்றத்தை ஸ்தம்பித்து வைத்து வருவதாக அவர் குற்றம்சாற்றியுள்ளார்.
நாடாளுமன்றத்தை முடக்குவதன் மூலம் எதிர்க்கட்சிகள் கண்ட பலன் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக நாடாளுமன்றம் முடக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
ஊழல் விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கை பா.ஜ.க. தனிப்பட்ட முறையில் விமர்சித்து வருவது கண்டனத்திற்குரியது என்று அவர் கூறியுள்ளார்.
மன்மோகன் சிங் தலைமையில் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளதாகவும், சிறுபான்மை, பெரும்பான்மை ஆகிய இரண்டு மதசார்புக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்றார்.
காங்கிரஸ் கட்சி அடித்தட்டு நிலையில் இருந்து மறுகட்டுமானம் செய்ய வேண்டும் என்பதை பீகார் தேர்தல் முடிவுகள் காட்டுவதாக தெரிவித்துள்ள சோனியா, கட்சியின் பலவீனங்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டிய தருணம் இது என்றார்.