அதிகாரத் தரகர் நீரா ராடியாவிற்கும், தொழிலதிபர் ரத்தன் டாடாவிற்கும் இடையே நடந்த உரையாடல் பதிவு ஊடகங்களில் வெளியானது துரதிருஷ்டவசமானது என்றாலும், தவிர்க்க இயலாதது என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
டெல்லியில் தனியார் தொலைக்காட்சியின் விருது வழங்கு விழாவில் பேசிய அமைச்சர் சிதம்பரம், “வரி ஏய்ப்பு செய்துவரும் ஒரு நபரின் உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டது. அது ஒருவர் பேசுவதன் பதிவாக மட்டுமே இருக்காது, மறுமுனையில் பேசுபவரின் உரையும் பதிவாவதைத் தடுக்க முடியாது. ஆனால், 2ஜி போன்ற ஒரு பெரும் ஊழல் அல்லது வரி ஏய்ப்பு தொடர்பான விவரங்கள் வெளியாகும்போது இப்படிப்பட்ட உரையாடல் பதிவுகளும் வெளியாவதை தடுக்க இயலாது. அது துரதிருஷ்டவசமானதுதான், இருந்தாலும் தவிர்க்க முடியாதது” என்று கூறியுள்ளார்.
வரி ஏய்ப்பை கண்டுபிடிக்கவே அந்த உரையாடல் பதிவு நடந்ததென்றால் அது ஊடகங்களில் வெளியானது ஏன் என்று கேட்டு, அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி ரத்தன் டாடா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், உள்துறை அமைச்சர் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.
ஊழலை பெரிதுபடுத்தக் கூடாது
ஒன்றன் பின் ஒன்றாக ஊழல் விவகாரங்கள் வெளிவரு்வது இந்தியாவின் வணிகச் சூழலைப் பாதிக்காதா? என்று கேட்டதற்கு, அது குறித்து வணிக நிறுவனங்கள் கவலைப்பட வேண்டாம் என்று சிதம்பரம் கூறியுள்ளார்.
“இப்படிப்பட்ட கறைகள் ஏற்படுவது கவலையாகத்தான் உள்ளது. பேராசிரியர் பகவதி நேற்று கூறியதுபோல், நாம் ஊழலை பெரிதுபடுத்தாமல் இருப்போம். அது ஒரு பிரச்சனைதான், அதற்குக் காரணமானவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்பட வேண்டும். அதற்கான எல்லாம் ஊழல் மயமாகிவிட்டது என்று கூறிக்கொண்டிருக்கக் கூடாது” என்று சிதம்பரம் கூறியுள்ளார்.